மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

நாகலிங்கப் பூ



நாகலிங்கப்பூ மரம், தென்னமெரிக்காவின் வடபகுதி, வெப்பவலய அமெரிக்கா, தென் கரிபியன் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது.  இதைத் தாவரவியல் பெயராக "Couroupita guianensis" என்று அழைக்கிறார்கள். இது "மக்னோலியோபைட்டா" எனும் பிரிவில் "மக்னோலியோப்சிடா" எனும் வகுப்பில் "எரிகேலெஸ்" வரிசையில் "லெசித்திடேசியே" எனும் குடும்பத்தில் "கூருபிட்டா" எனும் பேரினமாக உள்ளது. இந்த மரம் 30 முதல் 35 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது.

இந்த மரத்தின் பூ மரத்தின் மேல் பகுதியில் பூப்பதில்லை. வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்களும் காய்களும் நிறைந்து கிடக்கின்றன. இதில் பூக்கள் உருண்டை வடிவில் மொட்டுக்களாக இருக்கும். இந்த மொட்டுக்கள் மலரும் போது சிகப்பு நிற இதழ்கள் விரிந்து உள்ளே நாகப்பாம்புகள் குடை விரித்திருக்க அதனுள்ளே சிவலிங்கம் இருப்பது போன்ற அமைப்பில் அருமையான பூவாக மலர்கிறது. சில மொட்டுக்கள் காயாகும் போது பெரிய உருண்டை போல் இருக்கிறது. இந்த அதிசயமான பூக்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கிறது. இந்த நாகலிங்கப்பூ சில மூலிகை மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.