மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

வற்றல், வடகம் வகைகள்


ஜவ்வரிசி அப்பளம்


தேவையான பொருட்கள்:
  • ஜவ்வரிசி – 250 கிராம்
  • பச்சை மிளகாய் – 8 எண்ணம்
  • எலுமிச்சம் பழம் - 2 எண்ணம்
  • உப்பு - சிறிது
  • பெருங்காயம் - சிறிது
செய்முறை:

1. பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. அடிகனமான பாத்திரம் அல்லது குக்கரில் தண்ணீர் வைத்து, கொதித்ததும் ஜவ்வரிசியைச் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த மிளகாய் விழுதைச் சேர்க்கவும்.
3. தண்ணீர் தேவையானால் சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜவ்வரிசி பாதி வெந்ததும், மேல் பாகம் கண்ணாடி போல் ஆகி, உள்ளே சிறிது மட்டும் வெள்ளை தெரியும் போது மூடிவைத்து, அடுப்பை அணைத்து விடவும்.
4. கெட்டியான விழுதாக இருக்கும் இந்தக் கலவையை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, பிளாஸ்டிக் பேப்பரில் வைத்துத் தண்ணீரைத் தொட்டுத் தொட்டு, கையால் பெரிதாக அப்பளமாகத் தட்டவும்.
5. இந்த அப்பளத்தை வெள்ளைப் பருத்தித் துணியில் சூரிய வெப்பத்தில் காயப் போட வேண்டும். இருபுறமும் காய்ந்த பின்பு எடுத்து வைத்துக் கொள்ளலாம். தேவையான போது எண்ணெய்யில் பொறித்துச் சாப்பிடலாம்.

குறிப்பு: ஜவ்வரிசிக்கு மொத்தமாக நீர்விட்டு கொதிக்கவிடக் கூடாது. சிறிது சிறிதாக குளிர்ந்த நீர் விட்டு கொதிக்க விட்டால்தான் ஜவ்வரிசி ஒட்டாமல் வேகும். கூடவே கரையாமல் இருக்கும்.

ஜவ்வரிசி அப்பளம் உணவுக்குத் துணையாக வைத்துச் சாப்பிடலாம். தனியாகவும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இந்த அப்பளம் மிகவும் விருப்பமான ஒன்று.

===================================================================== 

இட்லிப் பொடி

தேவையான பொருட்கள்:
  • கடலைப் பருப்பு - 100 மில்லி கிராம்
  • உளுத்தம் பருப்பு - 100 மில்லி கிராம்
  • கருப்பு எள் - 50 மில்லி கிராம்
  • மிளகாய் வற்றல் - 30 எண்ணம்
  • பெருங்காயம் - 15 கிராம்
  • வெல்லம் - சிறிது
  • உப்பு - தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி.
செய்முறை:

1. முதலில் எள்ளைத் தண்ணீரில் ஊற வைத்து, கல் நீக்கி அரித்து வைக்கவும். கருப்புத் தோல் நீங்க தேய்த்து பின்னர் காய வைக்கவும்.
2. எள்ளை வாணலியில் எண்ணெய் விடாமல் வாசனை வரும் வரை வறுக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டு மீதமுள்ள அனைத்துப் பொருட்களையும் சிவக்க வறுக்கவும். ஆறியதும் அதை மிக்சியில் அரைக்கவும்.

குறிப்பு: எள் வாசனை பிடிக்காதவர்கள் ஐந்து மேசைக் கரண்டி தேங்காய்த் துருவலை வறுத்து அரைப்பதுடன் சேர்க்கவும்.

இட்லிப் பொடியை இட்லி, தோசை ஆகியவற்றிற்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காயெண்ணெய் சேர்த்துத் தொட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும். எண்ணெய் சேர்க்காமலும் சாப்பிடலாம்.

======================================================================

புதினாப் பொடி


தேவையான பொருட்கள்:
  • புதினா - 5 கட்டு
  • உளுத்தம் பருப்பு - 50 மில்லி
  • கடலை பருப்பு - 50 மில்லி
  • மிளகு - 10 எண்ணம்
  • மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
  • பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • இஞ்சி - சிறிது
  • உப்பு - தேவையான அளவு
  • கடலெண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி.
செய்முறை:

1. முதலில் புதினாவை நன்கு அலம்பி, இதழ்களாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் அவற்றை நிழலில் காய வைக்கவும். அதன் பின் எண்ணெய் விட்டு நன்கு மொறுமொறு என்று வறுக்கவும்.
2. ஒரு வாணலியில் கொடுத்துள்ள உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் இஞ்சி, மிளகு, உப்பு அனைத்தையும் எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
3. பின்னர் ஆறியதும், வறுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் பொடி செய்து, கடைசியில் புதினாவை சேர்த்து நைசாகப் பொடி செய்யவும்..

இந்தப் புதினா பொடியை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். நீர் மோர், அல்லது கஞ்சி செய்யும் போது இந்தப் பொடியை ஒரு சிறிய மேசைக்கரண்டி அளவு சேர்க்கலாம். நல்ல மணமாக இருக்கும்.

=======================================================================

மல்லிவிதைப் பொடி


தேவையான பொருட்கள்:
  • மல்லிவிதை - 200 மில்லி
  • கடலைபருப்பு - ஒரு குழிக்கரண்டி
  • உளுந்தம் பருப்பு - ஒரு குழிக்கரண்டி
  • மிளகு - ஒரு சிறிய மேசைகரண்டி
  • வரமிளகாய் - 10 எண்ணம்
  • புளி - எலுமிச்சை அளவு
  • பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி
  • கறிவேப்பிலை - 10 இலைகள்
  • தேங்காய் எண்ணெய் - ஒரு மேசை கரண்டி
  • உப்பு தேவையான அளவு.
செய்முறை:

1. ஒரு வாணலியில் மல்லிவிதை,கறிவேப்பிலை இரண்டையும் எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
2. பின்னர் கடலைபருப்பு,உளுத்தம் பருப்பு, மிளகு, வரமிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக எண்ணெய் விட்டு வறுக்கவும்..
3. நன்கு ஆறியதும் மிக்ஸ்யில் புளி சேர்த்து போட்டு நன்கு பொடியாக அரைக்கவும். மல்லிவிதை பொடி தயார்.

இந்தப் பொடி பித்தத்திற்கு மிகவும் நல்லது. இந்தப் பொடியை சுடு சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் பித்தம் குணமாகும்.

=======================================================================

கறிவேப்பிலை பொடி


தேவையான பொருட்கள்:
  • கறிவேப்பிலை - 2 கப்
  • உளுத்தம் பருப்பு - 50 மில்லி
  • மிளகு - 10 எண்ணம்
  • சீரகம் - ஒரு சிறிய மேசைகரண்டி
  • வரமிளகாய் - 10 எண்ணம்
  • பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி
  • புளி - நெல்லிகாய் அளவு
  • இஞ்சி - ஒரு துண்டு
  • உப்பு தேவையான அளவு
  • கடலெண்ணெய் - நான்கு சிறிய மேசைகரண்டி.
செய்முறை:

1. முதலில் பச்சை கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு மொறு மொறுப்பாக வறுக்கவும்.
2. பின்னர் இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நன்கு வதக்கவும்.
3. பருப்பு, வரமிளகாய், மிளகு, சீரகத்தை எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
4. பின்னர் ஆறியதும் முதலில் இஞ்சி,புளி,பருப்புகளை மிக்ஸ்யில் போட்டு, அதன்பின்னர் மிளகு, சீரகம், மிளகாயை அரைக்கவும். கடைசியில் கறிவேப்பிலையை போட்டு நைசாக அரைக்கவும். கறிவேப்பில்லை பொடி தயார்.
இந்தப் பொடியை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

=======================================================================

தேங்காய்ப் பொடி


தேவையான பொருட்கள்:
  • முற்றிய தேங்காய் - 1
  • க.பருப்பு - 50 மில்லி
  • உ.பருப்பு - 50 மில்லி
  • மிளகாய் வற்றல் - 15 எண்ணம்.
  • கட்டிப் பெருங்காயம் - 1 துண்டு
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • கறிவேப்பிலை - 10 இலைகள்
  • உப்பு - தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் - 3 மேசைக் கரண்டி
செய்முறை:

1. முதலில் தேங்காயை பூப்பூவாக துருவிக கொள்ளவும்.
2. பின்னர் சிறிது எண்ணெய்விட்டு வரமிளகாய்,பெருங்காயத்தை வறுத்துக் கொள்ளவும். பின்னர் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை பொரித்துக் கொள்ளவும்.
3. மீதமுள்ள இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய்யில் துருவிய தேங்காயைப் போட்டு, நன்றாக வாசனை வரும்வரை சிவக்க வறுக்கவும்.
4. மிக்ஸியில் முதலில் பருப்பு, மிளகாய், பெருங்காயம், புளி, கறிவேப்பிலை ஆகியவற்றை கரகரப்பாக வறுத்துக் கொள்ளவும்.
5. கடைசியில் தேங்காயைச் சேர்த்து கரகர என்று அரைக்கவும். அதனுடன் உப்பு சேர்க்கவும்.
இந்த தேங்காய்ப் பொடியை சாதத்துடன், சிறிது நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

=======================================================================

பருப்புப் பொடி


தேவையான பொருட்கள்:
  • துவரம்பருப்பு - 200 மில்லி
  • கொள்ளு - ஒரு சிறிய குழிக்கரண்டி அளவு
  • மிளகு - 1 சிறிய மேசைக் கரண்டி
  • மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
  • கட்டிபெருங்காயம் - சிறிய துண்டு
  • கறிவேப்பில்லை காய்ந்தது - 10 இலைகள்
  • சுக்கு - சிறிய துண்டு
  • உப்பு - தேவையான அளவு.
செய்முறை:

1. முதலில் ஒரு வாணலியில் தனியாக கொள்ளுவை சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

2. அடுத்து துவரம்பருப்பை தனியாக சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
3.பின்னர்        மிளகு,மிளகாய்வற்றல்,பெருங்காயம்,சுக்கு,கறிவேப்பில்லையை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
4. நன்றாக அனைத்தும் ஆறியபின் மிக்ஸியில் போட்டு, அதனுடன் உப்புசேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.

இந்தப் பருப்புப் பொடியை சாதத்தில் தனியாகவோ அல்லது நெய், நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். தவிர இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

=======================================================================

உருளைக்கிழங்கு அப்பளம்


தேவையான பொருட்கள்:
  • உருளைக்கிழங்கு - 500 கிராம்
  • ஜவ்வரிசி - 500 கிராம்
  • அரிசிமாவு - 100 கிராம்
  • மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி
  • பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் - 50 கிராம்
  • உப்பு -தேவையான அளவு.
செய்முறை:

1. ஜவ்வரிசியைச் சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
2. உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
3. மசித்த உருளைக்கிழங்குடன் ஜவ்வரிசி மாவு, மிளகாய்ப் பொடி, உப்பு, காயம் கலந்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
4. கல்லுரலில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு உருளைக் கிழங்கு, ஜவ்வரிசி கலவையைப் போட்டு சிறிது சிறிதாக எண்ணெய் தடவி மிருதுவாக இடிக்கவும்.
5. இடித்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அரிசி மாவில் தொட்டு அப்பளமாக இடவும்.
6. இந்த அப்பளங்களை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
குழந்தைகளுக்கு மதிய வேளை உணவுக்குத் துணையாகவும், மாலை வேளைகளில் சிற்றுண்டியாகவும் பொரித்துக் கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும். பெரியவர்களும் சாப்பிடலாம்.

=======================================================================

காய் வற்றல்கள்


தேவையான பொருட்கள்:
  • தேவையான காய் - 1 கிலோ ( கத்தரிக்காய், கோவக்காய், பாகற்காய், வெண்டைக்காய், சீனிஅவரைக்காய் என்று எதுவாகவும் இருக்கலாம்)
  • உப்பு- தேவைக்கேற்ப.
  • சாதம் வடித்த நீர் அல்லது புளிப்பில்லாத மோர் - தேவையான அளவு.
செய்முறை:

1. தேர்வு செய்த காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
2. சாதம் வடித்த நீர் அல்லது புளிப்பில்லாத மோரில் வெட்டி வைத்த காயை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
3. நன்றாக ஊறிய காய்த்துண்டுகளை வெயிலில் காயப் போடவும்.
4. ஈரப்பதமில்லாமல் இருக்கும் வரை காய வைத்து எடுக்கவும்.

காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து விட்டால் நமக்குத் தேவையான போதெல்லாம் எண்ணெய்யில் பொறித்துச் சாப்பிடலாம். 

=======================================================================

வெங்காய வடகம்


தேவையான பொருட்கள்:
  • உரித்த வெங்காயம்- 2 கிலோ
  • உளுந்தம் பருப்பு- 200 மி.லி
  • உப்பு- 150 மி.லி
  • வற்றல்- 80 எண்ணம்.
  • நல்லெண்ணெய்- 1 மேஜைக் கரண்டி.
  • வெள்ளைப் பூண்டு- 3 எண்ணம்.
  • சீரகம்- 1 மேஜைக் கரண்டி.
  • கடுகு- 1 மேஜைக் கரண்டி.
  • காயம்- சிறிது.
  • மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி.
  • கருவேப்பிலை- தேவைக்கேற்ப.
செய்முறை:

1. சிறிய வெங்காயத்தை பெரிய அளவாகப் பார்த்து வாங்கி
உரித்து சற்று பெரிய துண்டுகளாக ஒரே அளவில் வெட்டிக் கொள்ளவும்.
2. பூண்டு, கருவேப்பிலை இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
3. கடுகு, சீரகம், மஞ்சள் எல்லாவற்றையும் வெங்காயத்துடன் கலந்து வைக்கவும். 
4. உளுந்தை நன்கு ஊற வைத்து தோசைக்கு ஆட்டுவது போல் ஆட்டி வைக்கவும். 
5. பின் வற்றல், காயம், உப்பு சேர்த்து நன்கு ஆட்டவும். 
6. உளுந்து மாவு, வெங்காயம் மற்றும் அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேரும்படி கலக்கவும்.
7. ஒரு மேஜைக் கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும்.
8. வெள்ளைத் துணியில் இந்தக் கலவையைச் சிறிது சிறிதாக உருண்டை போட்டு சூரிய ஒளியில் காய வைக்கவும். 
9. மறுநாள் அதைத் திருப்பிப் போட்டு காய வைக்கவும்.
10. நான்கு அல்லது ஐந்து நாட்களில் இது நன்றாகக் காய்ந்து விடும்.

காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து விட்டால் நமக்குத் தேவையான போதெல்லாம் எண்ணெய்யில் பொறித்துச் சாப்பிடலாம். சாம்பார் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட வெங்காய வடகம் நன்றாக இருக்கும். இது ஈரம் படாமலிருந்தால் ஒரு வருட காலம் வரை கெடாமல் இருக்கும். 

=======================================================================